12/13/2018

குமரி கண்டம்

 சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். 
பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.

பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.

ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.

குமரிமாந்தரின் மொழியற்ற நிலை
“சைகை மொழி” – Sign Language.

குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.

இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000
எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி” (Gesture Language – or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை

1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)
இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.

2. விளியொலிகள் (Vocative Sounds) பிறரை
விளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.

3. ஒப்பொலிகள் (Imitative Sounds)
இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.

4. குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படி
கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.

5. வாய்ச் செய்கையொலிகள்
வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.

6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)
குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.

7. சுட்டொலிகள் (Decitive Sounds)
சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.

8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,
அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களை
எழுப்பும் ஒலிகள் எனப்படும்.

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000
மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!
குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்

1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது


குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:
 

சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
 

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)
 

"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." [2]
 

இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
 

இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

12/08/2018

நடராஜர் உருவத்தின் தத்துவம் இது தான்!

சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயன்மார்கள் இயம்பியுள்ளனர்.
இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு.
நடராச உருவத்தின் தத்துவம் பின்வருமாறு :
* ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றல் குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்).
* ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும்.
* இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலை குறிக்கும்.
* இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலை குறிக்கும்.
* தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும்.

11/29/2018

வீரபாண்டிய கட்டபொம்மன்

தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஜனவரி 3, 1760 
பிறப்பிடம்: பாஞ்சாலங்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: அக்டோபர் 16, 1799
தொழில்: மன்னர், போராட்ட வீரர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
பொம்மு மற்றும் ஆதி கட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியர். ஜெகவீர கட்டபொம்மன் திக்குவிசய கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார். இத்தம்பதியருக்கு மகனாக ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்தார். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை (குமாரசாமி என்றும் அழைக்கப்பட்டார்), துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர், கட்டபொம்மன் அவர்கள், வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்ட்டபோம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 மாம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
ஆங்கிலேயர்களுடன் மோதல்
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில், ஆங்கிலேயர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், தடைக் கற்களாக இருந்ததால், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.
பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், கட்டபொம்மனால் வரி செலுத்த முடியவில்லை. கப்பம் கட்ட போதிய பணம் இல்லாததால், திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி, மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார், கட்டபொம்மன். இதனைப் பல மக்களும், பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டி, கட்டபொம்மனை ‘கொள்ளையர்’ என்றெல்லாம் சாடினர். அப்போது, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவர் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,
“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?
“வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
போர் 
வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிகுக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர்.
இறக்கும் தருவாயில் அவர் பேசிய வீர வசனங்கள் 
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
தூக்கு மேடை எயரிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் மனத்திலும் பெருமிதத்தை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.

11/24/2018

வள்ளல் பாரி வேள் வரலாறு!

பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவர்.இவர் ஒரு குறுநில மன்னர், வேள் என்ற வம்ச வழி வருபவர்கள். எனவே பாரிவேள் என்று அழைப்பது உண்டு.இவரதுக்காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு.
இவர் ஆண்ட இடம் பறம்பு மலை எனப்படும் , அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும்.அது தற்போது பிறான்மலை எனப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு, இங்கே ஒரு சிவன் கோவில், முருகன் கோவில் உள்ளது.
பிறான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகில் உள்ளது.
பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது.அப்படி இருந்தப்போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தண்மையே.கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.
பாரியின் பால்யகால நண்பர் தமிழ் புலவரான கபிலர் ஆவார்.இவர் குறித்து கபிலர் பல பாடல்களை பாடியுள்ளார்.நறுமுகையே …நறுமுகையே எனத்துவங்கும் பாடலில் பாரி மகள்கள் பாடுவதாக எழுதியதும் கபிலர் தான்.
பாரி நகர்வலம் சென்றபோது பற்றிப்படர கொழுக்கொம்பு இன்றி தரையில் கிடந்த முல்லைக்கொடிக்காக தேரை தந்து வந்தது அனைவரும் அறிந்த புகழ்ப்பெற்ற சம்பவம் ஆகும்.
பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள், பல காலம் முற்றுகை இட்டும் வெற்றிக்கிடைக்கவில்லை அவர்களுக்கு.
முற்றுகை இட்டக்காலத்தில் உணவுத்தேவையை சமாளிக்க கபிலர் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை அனுப்பி வயல்களிலிருந்து நெற்கதிர்களை எடுத்து வர செய்து மக்களுக்கு உணவளிக்க செய்ததாக ஒரு கதை உண்டு.
அதே கபிலரே பின்னர் பாரி வீழ்ச்சிக்கும் காரணம் ஆனதாகவும் சொல்கிறார்கள்.
மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க்களத்திலும் புலவர்களை மதித்தார்கள் போலும்.
அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே
அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக்கேட்டார்கள்.
நாங்களும் பலக்காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரிக்கோட்டைக்குள் இருந்துக்கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், , மேலும் பாரியை எப்படி வெல்வது என்று வழிக்கேட்டார்கள்,
கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளது, வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும்,கிழங்குகளும் உள்ளது, மேலும் மூங்கில் நெல் உள்ளது அவற்றைக்கொண்டே உணவுத்தேவையை சமாளித்துக்கொள்ள முடியும், நீங்கள் ஆண்டுக்கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார்.
அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக்கேட்டதர்கு, போரில் அவரை வெல்லமுடியாது, ஆனால் நீங்கள் அவரிடம் யாசகமாக தேசத்தைக்கேட்டாலும் கொடுத்துவிடுவார், அதற்கு நீங்கள் இரவலர்கள் போல் சென்று பாட்டுப்பாடி அவரை மகிழ்விக்கவும், முடிந்தால் உங்கள் துணைவியர்களையும் அழைத்து சென்று பாணர்கள் வேடத்தில் பாடினால் மனம் மகிழ்ந்து கேட்டதை பரிசாகக்கொடுப்பான் பாரி என்று அவர்களுக்கு வழிக்காட்டினார் கபிலர்.மேலும் சீக்கிரம் போய் கேட்டால் நல்லது பாரி ஏற்கனாவே அவரது ஆட்சிக்குட்பட்ட 300 ஊர்களையும் தானம் அளித்துவிட்டார், இப்போது இருப்பது இந்த மலையும் , அரண்மனையும் மட்டுமே என்றார்.
ஆரம்பத்தில் மூவேந்தர்களும் தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பாட்டுப்பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்கு சென்று ஆடிப்பாடி அவரை மகிழ்வித்தார்கள்.
மனம் மகிழ்ந்த பாரி என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள் , என்னிடம் இருப்பது எதைக்கேட்டாலும் தருவேன் என்றார். மூவேந்தர்களும், உங்கள் நாடும் , உங்கள் உயிரும் வேண்டும் என்று தயங்காமல் கேட்டார்கள். அவையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தானம் கேட்பதற்கும் எல்லை உண்டு நாட்டைக்கேட்டாலும் எப்படி உயிரைக்கேட்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
பாரிக்கும் வந்திருப்பது பாணர்கள் அல்ல மூவேந்தர்கள் என்பது தெரிந்தாலும், சொன்ன சொல்லை மீறக்கூடாது என்று வாளை எடுத்து வைத்துவிட்டு அவர்கள் முன் நின்று உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அளித்துவிட்டார்.
இப்படி ஒருவன் உயிரையும் தானம் அளிக்க முன் வருகிறானே எனப்பாராட்டாமல் அவர்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்த மூவேந்தர்கள், தங்கள் வாட்களை பாரிமீது பாய்ச்சி அவர் உயிரை மாய்த்தார்கள்.
பாரி இறக்கும் தருவாயில், அவரது மகள்கள் அங்கவை ,சங்கவை ஆகிய இருவரையும் கபிலரிடம் ஒப்படைத்து ஒரு தந்தையாக என்னால் இவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் கடமையை நிறைவேற்ற முடியவில்லை, நீங்கள் தந்தையாக நின்று அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்றுக்கேட்டுக்கொண்டார்.
இல்லை எனாது , கேட்டவர்களுக்கு கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட பாரி தன் உயிரையும் அளித்து இரவாப்புகழ் பெற்றார்.
தன்னால் தான் பாரியின் உயிர்ப்போயிற்று என்று வருந்தி , இனி உயிரோடு இருக்கக்கூடாது என்று கபிலர் நினைத்தாலும், பாரிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயன்றார்.
மூவேந்தர்கள் மீது இருந்த பயத்தால் எந்த மன்னர்களும் பாரி மகள்களை மணம் முடிக்க முன்வரவில்லை.
மூவேந்தர்களைக்கண்டு பயப்படாத மற்றொரு கடை ஏழு வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்பவர் மட்டும் முன்வந்தார்.
இருவரில் ஒருவரைக் காரிக்கு மணம்முடித்து வைத்துவிட்டு, மற்றப்பெண்ணுக்கு மணம் முடித்து வைக்க இயலாமல் மனம் உடைந்த கபிலர், அப்பெண்ணை சில அந்தணர்கள் வசம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் படி ஒப்படைத்து விட்டு காட்டுக்கு சென்று பட்டிணி இருந்து தாமே உயிரைப்போக்கிக்கொண்டார்.
காரி , பாரி மகளை மணந்துக்கொண்டது அறிந்து கோபம் கொண்ட மூவேந்தர்கள் காரியின் மீதும் படை எடுத்து வந்து , போரில் அவரையும் கொன்றுவிட்டார்கள்.காரி இறந்ததும் அவருடன் சேர்ந்து பாரியின் மகளும் உயிரை மாய்த்துக்கொண்டாள்.

11/23/2018

தமிழ் மன்னன் எல்லாளன் பற்றிய வீர வரலாறு.


 எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சம் குறிப்பிடுகின்றது.
மகாவம்சத்தின் படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்த ஒருவன் ஆவான். இவன் “பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்” சேர்ந்தவன் என்று மகாவம்சம் கூறுகிறது. ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார்.
இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்ட தமிழ் மன்னன்
 எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் “மகாவம்சம்.” சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
புகழ் பெற்ற தமிழ் மன்னன்
இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட “மகாவம்சம்” நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மன்னன் எல்லாளன் பற்றி மகாவம்சம் கூறுவதாவது
எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந்தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.
ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, “உன் குறை என்ன?” என்று கேட்டான்.”உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்” என்று கூறினாள்.அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது)
ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.உடனே மந்திரிகளை அழைத்து, “புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்’ என்றான்.அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். “நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்” என்று கூறினர். “நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்” என்று தெரிவித்தார்கள்.மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.
துட்ட காமினி (துட்ட கைமுனு)
இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.
தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. “எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்” என்று தகவல் அனுப்பினார். இதனால் சீற்றம் அடைந்த துட்ட காமினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.
இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.துட்டகாமினியை கோட்டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவ செய்யப்பட்டது. அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.”நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்” என்றான்.போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.
இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்.”இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்” என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.
இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

ராஜ ராஜ சோழன், வரலாற்றுப் பதிவு

மும்முடிச் சோழன் என புகழப்பெறும் ராஜராஜ சோழனின் வரலாற்றினை சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

இரண்டாம் பராந்தக சோழனான சுந்தர சோழனுக்கும் அவன் பட்டத்தரசி வானவன் மாதேவிக்கும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் பிறந்தான் அருண்மொழிவர்மன்.

இது "சதய நாள் விழா உதியர் மண்டலந் தன்னில் வைத்தவன்"
என்ற கலிங்கத்துபாரணி அடிகளால் பெறப்படுகிறது.


திருவாலங்காட்டு செப்பேடுகள் இவன் கைகளில் சங்கு,சக்கர ரேகைகள் இடம் பெற்று இருந்தன என்று குறிப்பிடுகின்றன.

சுந்தர சோழனுக்கு மூன்று பெரிய தந்தைகள் இருந்தனர்.ஆகையால் சுந்தர சோழன் ஆட்சி பீடம் ஏறமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர்.ஆனால் முதலாம் பராந்தகனின் புதல்வன் உத்தமசீலி என்பான் பாண்டிய நாட்டு போரில் உயிர் துறந்தான்.அது போலவே முதல் பராந்தகனின் முதல் புதல்வனும் மிக பெரும் வீரனுமாகிய ராசாதித்தன் ராட்டிடகூட போரில் ஆனை மேலமர்ந்த படியே வீரசொர்க்கம் எய்தினான்.

முதலாம் பராந்தகனுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார் அவரது இரண்டாம் புதல்வர் கண்டராதித்தர்.கண்டராதித்தனின் புதல்வன் சிறிய குழந்தை என்பதால் அவருக்கு பின்னர் அவனது இளவலும் சுந்தர சோழனின் தந்தையுமாகிய அரிஞ்சய சோழன் ஆட்சிக்கு வந்தான்.சில திங்களில் அவனும் காலமானதால் அவனது புதல்வனாகிய இரண்டாம் பராந்தக சோழனாகிய சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.

சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள்.முதலாமவன் பெரும் வீரனாகிய ஆதித்ய கரிகாலன்.அவனுக்கடுத்து குந்தவை என்னும் பெண் பிறந்தாள்.இவர்களுக்கு பின்னர் கடைக்குட்டியாக பிறந்தவன் தான் அருண்மொழிவர்மன்.

குந்தவி பிராட்டியார் வல்லவரையன் வந்தியத்தேவன் என்னும் கீழை சாளுக்கிய மன்னனை மணந்தார்.

அந்நாளில் பாண்டிய நாடு சோழரின் ஆதிக்கத்திற்கு உட்படாததால் பாண்டிய நாட்டின் மீது படையெடுப்பது இன்றியமையாததாகி விட்டது.கி.பி.966 இல் சுந்தர சோழனின் புதல்வன் ஆதித்ய கரிகாலன், கொடும்பாளூர் பூதி விக்கிரமகேசரி, தொண்டை நாட்டு சிற்றரசன் பார்த்திபேந்திரவர்மன் ஆகியோர் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தனர். அப்போரில் வீரபாண்டியனை கொன்று ஆதித்ய கரிகாலன் அப்போரில் பெரும் வெற்றி பெற்றான்.

"வீரபாண்டியனை தலை கொண்ட கோப்பரகேசரிவர்மன்"
என்றே ஆதித்ய கரிகாலன் திருவாலங்காடு செப்பேடுகளில் குறிப்பிடப்படுகிறான்.இவனது பெரும் ஆற்றலை கண்ட சுந்தர சோழன் இவனுக்கு கி.பி.966இல் இளவரசு பட்டம் சூட்டினான்.இத்துணை பெரிய ஆற்றலை உடைய இவன் கி.பி-969இல் சோழ நாட்டிலேயே சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான்.போர்க்களத்தில் எதிரிகளின் வாளுக்கு மடியாத கரிகாலன் சதிவலையில் வீழ்ந்து மடிந்தான்.

திருவாலங்காடு கல்வெட்டு,
"வானுலகை பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான்.உலகில் கலி என்னும் இருள் சூழ்ந்தது."
என்கின்றது.

ஆதித்த கரிகாலன் போன்றதொரு வீரனை அது நாள் வரை கண்டிராத சோழ நாடு அவனது மறைவால் சோகத்தில் ஆழ்ந்தது.ஆதித்தனின் மறைவை தாங்க இயலாத சுந்தர சோழன் சில திங்களில் வானுலகம் எய்தினான்.சுந்தர சோழனின் மறைவுக்கு பின்னர் சோழ நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் நிகழ்ந்தது.சோழ நாட்டின் கீழ் இருந்த சிற்றரசர்களில் ஒரு சாரார் கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்றும் மற்றொரு சாரர் அருண்மொழி வர்மனே ஆட்சி பீடம் ஏறவேண்டும் என்றும் தங்களுக்குள் பிரிந்தனர்.

சங்கு சக்கர ரேகைகளை உடைய அருண்மொழிவர்மனுக்கு மக்களின் ஆதரவு பெரும் அளவில் இருந்தது.இந்த அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி எதிரிகள் மீண்டும் சோழ நாட்டின் மீது படைஎடுக்க கூடாது என்று நினைத்த அருண்மொழிவர்மன் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ஆட்சி பீடத்தின் மீதான தனது உரிமையை கண்டராதித்தரின் புதல்வனான உத்தம சோழனுக்கு விட்டுகொடுத்தார்.
மிக பெரும் தொன்மை வாய்ந்த சோழ நாட்டின் அரசுரிமையை தனது சிறியதந்தைகாக விட்டு கொடுத்தது அருன்மொழிவர்மனின் தயாள குணத்தை காட்டுகிறது.

உத்தம சோழனின் பதினைந்து ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் கி.பி-985இல் அரசு கட்டில் ஏறினான் ராசகேசரி அருண்மொழிவர்மன்.தனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில்(கி.பி-988) சேரனையும் பாண்டியனையும் கந்தாளூர் சாலை போரில் வென்றான்.இப்போருக்கு பிறகே அரசருக்கேலாம் அரசர் என்று பொருள் படும் "ராஜராஜன்" என்னும் அபிஷேக பெயரை சூடினான்.அதுவே அவனது பெயராக பின்னாளில் மாறி போனது.

விசயாலய சோழனால் அடிகோலப்பட்ட பிற்கால சோழ அரசு மகோன்னதம் அடைந்தது இவனது ஆட்சியிலே தான்.அது நாள் வரை தேங்கி இருந்த சோழரின் ஆற்றலை அனைத்து துறைகளிலும் வெளிக்கொண்டு வந்து சோழர் பரம்பரையை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் பேச செய்தவன் இவனே.இவன் இயற்கைலேயே நுண்ணறிவும்,பெரும் ஆற்றலும்,மக்களின் செல்வாக்கும்,இறைவனின் ஆசியும் உடையவனாய் இருந்து இருக்க வேண்டும்.இவனது முப்பது ஆண்டு கால நீண்ட ஆட்சியும் இவனது சாதனைகளுக்கு பெருந்துணை புரிந்துள்ளது.

அது நாள் வரை எந்த தமிழ் மன்னரும் செய்திராத ஒன்றை ராசராசன் செய்தார்.தனது ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அனைவரும் நன்குணரும் பொருட்டு அவற்றை விளக்கும் மெய்க்கீர்த்தியை இனிய தமிழில் அகவற்பாவில் அமைத்து தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை தொடங்கினான்.மன்னனது ஆட்சி வளர வளர மெய்க்கீர்த்தியும் வளர்ந்து கொண்டே போகும்.மெய்க்கீர்த்திகளில் இருப்பனவெல்லாம் கற்பனை அல்ல.அவை அனைத்தும் அந்த மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களே.

இறுதி காலங்களில் கிடைத்த ராசராசனின் மெய்க்கீர்த்தி,

"திருமகள் போல பெருநில செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனங்கொளக்கருதி
காந்தளூர் சாலை கலமறுத்தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழிற் சிங்களரீழமண்டலமும்
இரட்டை பாடி எழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரமும்
திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
எழில் வளர் ஊழியுளெல்லா யாண்டும்
தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்
தேசுகொள் கோ ராசா கேசரி வர்மரான
உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர்..."

இந்தமெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளை ராசராசன் கைப்பற்றி இருந்தான் என்பது இதன் மூலம் பெரபடுகிறது.பாண்டி மண்டலமும்,சேர மண்டலமும் அடங்கிய ராசராச தென்மண்டலமும், தொண்டை மண்டலமாகிய சயங்கொண்ட சோழ மண்டலமும்,கங்க மண்டலமும்,கொங்கு மண்டலமும்,நுளம்பாடி மண்டலமும்,கலிங்க மண்டலமும்,ஈழமாகிய மும்முடி சோழ மண்டலமும் இவனது ஆட்சியில் சோழ நாட்டிற்க்கு உட்பட்டு இருந்தது என்பது பெறப்படுகிறது.

வளர்ந்து கொண்டே வநத சோழ சாம்ராஜ்யத்தின் நிதிநிலையை சமாளிக்க அது வரையில் யாரும் யோசிக்காத வண்ணம் தனது சாம்ராஜ்யத்தை அளக்க உத்தரவிட்டான் ராஜராஜன்.இப்பெரும் பணியை மிககுறுகிய காலத்தில் செய்து முடித்தவன் சேனாதிபதி குரவன் உலகளந்தானான ராசராச மாராயன்.எவ்வளவு நன்செய் நிலங்கள்,புன்செய் நிலங்கள்,காடுகள்,விளைநிலங்கள் என்பதை புலப்படுத்தி அவற்றுள் விளைநிலங்களுக்கு மட்டும் வரி விதிக்குமாறு பரிந்துரைத்தான்.

இவ்வாறு பலத்துறைகளில் சிறப்புற்று விளங்கிய ராஜராஜனுக்கு பல்வேறு அபிஷேக பெயர்கள் இருந்தன.
ஷத்திரிய சிகாமணி,ராசேந்திர சிங்கன்,உய்யக்கொண்டான்,
பாண்டிய குலாசினி,கேரளாந்தகன்,நித்த வினோதன்,ராசாசிரையன்,
சிவபாதசேகரன்,சநநாதன்,சிங்களாந்தகன்,சயங்கோண்டசோழன்,
மும்முடி சோழன்,ரவிகுல மாணிக்கம்,நிகரிலி சோழன்,
சோழேந்திர சிங்கன்,சோழமார்த்தாண்டன்,ராசா மார்த்தாண்டன்,
தெலுங்குகுல காலன்,கீர்த்தி பராக்கிரமன் என்பன ஆகும்.

மன்னர்கள் கோயில் கட்டுவது என்பது புதிது அன்று.எதையும் புதிதாக முயற்சி செய்யும் ராஜராஜன் இதிலும் தனது புதுமையை கட்டினார்.அதாவது அதுவரை தென்னாட்டில் எங்குமே இல்லாத பரிமாணத்தில் 793 அடி நீளத்தில் 397 அடி அகலத்தில் 216 அடி உயரத்தில் ராஜராஜேச்வரம் என்னும் கோயிலை கட்டினான்,இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்து தமிழரின் கட்டிட கலையை உலகிற்கு உணர்த்துவது திண்ணம்.

இவ்வாறாக பலத்துறைகளில் சோழர்களின் முத்திரையை பதித்த ராசராசன் கி,பி-1012இல் தனது புதல்வனாகிய, பின்னாளில் ராசேந்திரசோழன் என்னும் அபிஷேக பெயரை அடைந்த இளங்கோ மதுராந்தகருக்கு இளவரசு பட்டம் சூட்டினான்.

வாழ்க ராஜராஜ சோழர்! வளர்க அவர் கீர்த்தி!

11/21/2018

உருத்திராட்சம் அணியும் போது பின்பற்ற வேண்டியவை

நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.
துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.
ருத்ராட்ச மாலையை அணியும் முறை
குடுமியில் அணிய வேண்டியது – 1
தலை உச்சியில் அணிய வேண்டியது – 13
தலையில் அணிய வேண்டியது – 36
காதில் அணிய வேண்டியது 1 அல்லது 6
கழுத்தில் அணிய வேண்டியது – 32
புஜத்தில் (கை 1க்கு) அணிய வேண்டியது – 16
ஒரு மணிக்கட்டில் அணிய வேண்டியது  – 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்க வேண்டியது – 25
இம்மை மறுமை பலன்களை அடைய உதவும் ஜெபமாலையில் (கையில் வைத்துக் கொள்ள) கட்ட வேண்டியது 27,53 அல்லது 108.
ருத்ராட்ச வடிவங்கள்
ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன் கொடுக்கிறது. சிவ புராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது
ஒரு முகம் – சிவ வடிவம்
இரு முகம் – தேவி வடிவம்
மூன்று முகம் – அக்னி சொரூபம்
நான்கு முகம் – பிரம்ம வடிவம்
ஐந்து முகம் – ருத்ர வடிவம்
ஆறு முகம் – சண்முக வடிவம்
ஏழு முகம் – அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் – கணபதி வடிவம்
ஒன்பது முகம் – பைரவர் வடிவம்
பத்து முகம் – திருமால் வடிவம்
11 முகம் – ஏகாதச ருத்திர வடிவம்
12 முகம் – துவாதச ஆதித்ய வடிவம்
13 முகம் – முருகன் வடிவம்
14 முகம் – சிவ வடிவம்
ருத்ராட்சையின் பிற பெயர்கள்
ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன
ருத்ராட்ச சிவலிங்கம்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச நாதர் கோயிலில் உள்ள மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலை அடிவாரத்திலுள்ள இந்தக் கோயிலின் மூலவரே, உலகின் முதல் சிவலிங்கம் என தல புராணம் கூறுகிறது. பங்குனி 22 முதல் சித்திரை முதல் தேதி வரை இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இமயத்தில் சிவபார்வதிக்கு நடந்த திருமணத்தை பொதிகையில் அகத்தியர் கண்டார். அந்த நிகழ்ச்சி சித்திரை முதல் நாளில் இங்கு நடத்தப்படும்.
ருத்ராட்சத்தால் ஆன அம்மன்
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இங்குள்ள கோயிலில் அருள்பாலிக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை சோட்டாணிக்கரை பகவதி என்று அழைக்கிறார்கள். இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனது என்பது தனி சிறப்பு. இவள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இங்கு வழிபாடு செய்து குணமடைகிறார்கள்.

குமரி கண்டம்

 சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப...