11/29/2018

வீரபாண்டிய கட்டபொம்மன்

தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஜனவரி 3, 1760 
பிறப்பிடம்: பாஞ்சாலங்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: அக்டோபர் 16, 1799
தொழில்: மன்னர், போராட்ட வீரர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
பொம்மு மற்றும் ஆதி கட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியர். ஜெகவீர கட்டபொம்மன் திக்குவிசய கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார். இத்தம்பதியருக்கு மகனாக ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்தார். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை (குமாரசாமி என்றும் அழைக்கப்பட்டார்), துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர், கட்டபொம்மன் அவர்கள், வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்ட்டபோம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 மாம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
ஆங்கிலேயர்களுடன் மோதல்
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில், ஆங்கிலேயர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், தடைக் கற்களாக இருந்ததால், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.
பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், கட்டபொம்மனால் வரி செலுத்த முடியவில்லை. கப்பம் கட்ட போதிய பணம் இல்லாததால், திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி, மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார், கட்டபொம்மன். இதனைப் பல மக்களும், பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டி, கட்டபொம்மனை ‘கொள்ளையர்’ என்றெல்லாம் சாடினர். அப்போது, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவர் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,
“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?
“வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
போர் 
வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிகுக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர்.
இறக்கும் தருவாயில் அவர் பேசிய வீர வசனங்கள் 
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
தூக்கு மேடை எயரிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் மனத்திலும் பெருமிதத்தை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.

11/24/2018

வள்ளல் பாரி வேள் வரலாறு!

பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவர்.இவர் ஒரு குறுநில மன்னர், வேள் என்ற வம்ச வழி வருபவர்கள். எனவே பாரிவேள் என்று அழைப்பது உண்டு.இவரதுக்காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு.
இவர் ஆண்ட இடம் பறம்பு மலை எனப்படும் , அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும்.அது தற்போது பிறான்மலை எனப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு, இங்கே ஒரு சிவன் கோவில், முருகன் கோவில் உள்ளது.
பிறான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகில் உள்ளது.
பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது.அப்படி இருந்தப்போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தண்மையே.கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.
பாரியின் பால்யகால நண்பர் தமிழ் புலவரான கபிலர் ஆவார்.இவர் குறித்து கபிலர் பல பாடல்களை பாடியுள்ளார்.நறுமுகையே …நறுமுகையே எனத்துவங்கும் பாடலில் பாரி மகள்கள் பாடுவதாக எழுதியதும் கபிலர் தான்.
பாரி நகர்வலம் சென்றபோது பற்றிப்படர கொழுக்கொம்பு இன்றி தரையில் கிடந்த முல்லைக்கொடிக்காக தேரை தந்து வந்தது அனைவரும் அறிந்த புகழ்ப்பெற்ற சம்பவம் ஆகும்.
பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள், பல காலம் முற்றுகை இட்டும் வெற்றிக்கிடைக்கவில்லை அவர்களுக்கு.
முற்றுகை இட்டக்காலத்தில் உணவுத்தேவையை சமாளிக்க கபிலர் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை அனுப்பி வயல்களிலிருந்து நெற்கதிர்களை எடுத்து வர செய்து மக்களுக்கு உணவளிக்க செய்ததாக ஒரு கதை உண்டு.
அதே கபிலரே பின்னர் பாரி வீழ்ச்சிக்கும் காரணம் ஆனதாகவும் சொல்கிறார்கள்.
மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க்களத்திலும் புலவர்களை மதித்தார்கள் போலும்.
அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே
அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக்கேட்டார்கள்.
நாங்களும் பலக்காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரிக்கோட்டைக்குள் இருந்துக்கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், , மேலும் பாரியை எப்படி வெல்வது என்று வழிக்கேட்டார்கள்,
கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளது, வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும்,கிழங்குகளும் உள்ளது, மேலும் மூங்கில் நெல் உள்ளது அவற்றைக்கொண்டே உணவுத்தேவையை சமாளித்துக்கொள்ள முடியும், நீங்கள் ஆண்டுக்கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார்.
அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக்கேட்டதர்கு, போரில் அவரை வெல்லமுடியாது, ஆனால் நீங்கள் அவரிடம் யாசகமாக தேசத்தைக்கேட்டாலும் கொடுத்துவிடுவார், அதற்கு நீங்கள் இரவலர்கள் போல் சென்று பாட்டுப்பாடி அவரை மகிழ்விக்கவும், முடிந்தால் உங்கள் துணைவியர்களையும் அழைத்து சென்று பாணர்கள் வேடத்தில் பாடினால் மனம் மகிழ்ந்து கேட்டதை பரிசாகக்கொடுப்பான் பாரி என்று அவர்களுக்கு வழிக்காட்டினார் கபிலர்.மேலும் சீக்கிரம் போய் கேட்டால் நல்லது பாரி ஏற்கனாவே அவரது ஆட்சிக்குட்பட்ட 300 ஊர்களையும் தானம் அளித்துவிட்டார், இப்போது இருப்பது இந்த மலையும் , அரண்மனையும் மட்டுமே என்றார்.
ஆரம்பத்தில் மூவேந்தர்களும் தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பாட்டுப்பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்கு சென்று ஆடிப்பாடி அவரை மகிழ்வித்தார்கள்.
மனம் மகிழ்ந்த பாரி என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள் , என்னிடம் இருப்பது எதைக்கேட்டாலும் தருவேன் என்றார். மூவேந்தர்களும், உங்கள் நாடும் , உங்கள் உயிரும் வேண்டும் என்று தயங்காமல் கேட்டார்கள். அவையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தானம் கேட்பதற்கும் எல்லை உண்டு நாட்டைக்கேட்டாலும் எப்படி உயிரைக்கேட்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
பாரிக்கும் வந்திருப்பது பாணர்கள் அல்ல மூவேந்தர்கள் என்பது தெரிந்தாலும், சொன்ன சொல்லை மீறக்கூடாது என்று வாளை எடுத்து வைத்துவிட்டு அவர்கள் முன் நின்று உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அளித்துவிட்டார்.
இப்படி ஒருவன் உயிரையும் தானம் அளிக்க முன் வருகிறானே எனப்பாராட்டாமல் அவர்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்த மூவேந்தர்கள், தங்கள் வாட்களை பாரிமீது பாய்ச்சி அவர் உயிரை மாய்த்தார்கள்.
பாரி இறக்கும் தருவாயில், அவரது மகள்கள் அங்கவை ,சங்கவை ஆகிய இருவரையும் கபிலரிடம் ஒப்படைத்து ஒரு தந்தையாக என்னால் இவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் கடமையை நிறைவேற்ற முடியவில்லை, நீங்கள் தந்தையாக நின்று அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்றுக்கேட்டுக்கொண்டார்.
இல்லை எனாது , கேட்டவர்களுக்கு கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட பாரி தன் உயிரையும் அளித்து இரவாப்புகழ் பெற்றார்.
தன்னால் தான் பாரியின் உயிர்ப்போயிற்று என்று வருந்தி , இனி உயிரோடு இருக்கக்கூடாது என்று கபிலர் நினைத்தாலும், பாரிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயன்றார்.
மூவேந்தர்கள் மீது இருந்த பயத்தால் எந்த மன்னர்களும் பாரி மகள்களை மணம் முடிக்க முன்வரவில்லை.
மூவேந்தர்களைக்கண்டு பயப்படாத மற்றொரு கடை ஏழு வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்பவர் மட்டும் முன்வந்தார்.
இருவரில் ஒருவரைக் காரிக்கு மணம்முடித்து வைத்துவிட்டு, மற்றப்பெண்ணுக்கு மணம் முடித்து வைக்க இயலாமல் மனம் உடைந்த கபிலர், அப்பெண்ணை சில அந்தணர்கள் வசம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் படி ஒப்படைத்து விட்டு காட்டுக்கு சென்று பட்டிணி இருந்து தாமே உயிரைப்போக்கிக்கொண்டார்.
காரி , பாரி மகளை மணந்துக்கொண்டது அறிந்து கோபம் கொண்ட மூவேந்தர்கள் காரியின் மீதும் படை எடுத்து வந்து , போரில் அவரையும் கொன்றுவிட்டார்கள்.காரி இறந்ததும் அவருடன் சேர்ந்து பாரியின் மகளும் உயிரை மாய்த்துக்கொண்டாள்.

11/23/2018

தமிழ் மன்னன் எல்லாளன் பற்றிய வீர வரலாறு.


 எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சம் குறிப்பிடுகின்றது.
மகாவம்சத்தின் படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்த ஒருவன் ஆவான். இவன் “பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்” சேர்ந்தவன் என்று மகாவம்சம் கூறுகிறது. ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார்.
இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்ட தமிழ் மன்னன்
 எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் “மகாவம்சம்.” சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
புகழ் பெற்ற தமிழ் மன்னன்
இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட “மகாவம்சம்” நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மன்னன் எல்லாளன் பற்றி மகாவம்சம் கூறுவதாவது
எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந்தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.
ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, “உன் குறை என்ன?” என்று கேட்டான்.”உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்” என்று கூறினாள்.அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது)
ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.உடனே மந்திரிகளை அழைத்து, “புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்’ என்றான்.அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். “நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்” என்று கூறினர். “நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்” என்று தெரிவித்தார்கள்.மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.
துட்ட காமினி (துட்ட கைமுனு)
இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.
தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. “எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்” என்று தகவல் அனுப்பினார். இதனால் சீற்றம் அடைந்த துட்ட காமினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.
இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.துட்டகாமினியை கோட்டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவ செய்யப்பட்டது. அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.”நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்” என்றான்.போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.
இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்.”இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்” என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.
இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

ராஜ ராஜ சோழன், வரலாற்றுப் பதிவு

மும்முடிச் சோழன் என புகழப்பெறும் ராஜராஜ சோழனின் வரலாற்றினை சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

இரண்டாம் பராந்தக சோழனான சுந்தர சோழனுக்கும் அவன் பட்டத்தரசி வானவன் மாதேவிக்கும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் பிறந்தான் அருண்மொழிவர்மன்.

இது "சதய நாள் விழா உதியர் மண்டலந் தன்னில் வைத்தவன்"
என்ற கலிங்கத்துபாரணி அடிகளால் பெறப்படுகிறது.


திருவாலங்காட்டு செப்பேடுகள் இவன் கைகளில் சங்கு,சக்கர ரேகைகள் இடம் பெற்று இருந்தன என்று குறிப்பிடுகின்றன.

சுந்தர சோழனுக்கு மூன்று பெரிய தந்தைகள் இருந்தனர்.ஆகையால் சுந்தர சோழன் ஆட்சி பீடம் ஏறமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர்.ஆனால் முதலாம் பராந்தகனின் புதல்வன் உத்தமசீலி என்பான் பாண்டிய நாட்டு போரில் உயிர் துறந்தான்.அது போலவே முதல் பராந்தகனின் முதல் புதல்வனும் மிக பெரும் வீரனுமாகிய ராசாதித்தன் ராட்டிடகூட போரில் ஆனை மேலமர்ந்த படியே வீரசொர்க்கம் எய்தினான்.

முதலாம் பராந்தகனுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார் அவரது இரண்டாம் புதல்வர் கண்டராதித்தர்.கண்டராதித்தனின் புதல்வன் சிறிய குழந்தை என்பதால் அவருக்கு பின்னர் அவனது இளவலும் சுந்தர சோழனின் தந்தையுமாகிய அரிஞ்சய சோழன் ஆட்சிக்கு வந்தான்.சில திங்களில் அவனும் காலமானதால் அவனது புதல்வனாகிய இரண்டாம் பராந்தக சோழனாகிய சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.

சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள்.முதலாமவன் பெரும் வீரனாகிய ஆதித்ய கரிகாலன்.அவனுக்கடுத்து குந்தவை என்னும் பெண் பிறந்தாள்.இவர்களுக்கு பின்னர் கடைக்குட்டியாக பிறந்தவன் தான் அருண்மொழிவர்மன்.

குந்தவி பிராட்டியார் வல்லவரையன் வந்தியத்தேவன் என்னும் கீழை சாளுக்கிய மன்னனை மணந்தார்.

அந்நாளில் பாண்டிய நாடு சோழரின் ஆதிக்கத்திற்கு உட்படாததால் பாண்டிய நாட்டின் மீது படையெடுப்பது இன்றியமையாததாகி விட்டது.கி.பி.966 இல் சுந்தர சோழனின் புதல்வன் ஆதித்ய கரிகாலன், கொடும்பாளூர் பூதி விக்கிரமகேசரி, தொண்டை நாட்டு சிற்றரசன் பார்த்திபேந்திரவர்மன் ஆகியோர் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தனர். அப்போரில் வீரபாண்டியனை கொன்று ஆதித்ய கரிகாலன் அப்போரில் பெரும் வெற்றி பெற்றான்.

"வீரபாண்டியனை தலை கொண்ட கோப்பரகேசரிவர்மன்"
என்றே ஆதித்ய கரிகாலன் திருவாலங்காடு செப்பேடுகளில் குறிப்பிடப்படுகிறான்.இவனது பெரும் ஆற்றலை கண்ட சுந்தர சோழன் இவனுக்கு கி.பி.966இல் இளவரசு பட்டம் சூட்டினான்.இத்துணை பெரிய ஆற்றலை உடைய இவன் கி.பி-969இல் சோழ நாட்டிலேயே சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான்.போர்க்களத்தில் எதிரிகளின் வாளுக்கு மடியாத கரிகாலன் சதிவலையில் வீழ்ந்து மடிந்தான்.

திருவாலங்காடு கல்வெட்டு,
"வானுலகை பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான்.உலகில் கலி என்னும் இருள் சூழ்ந்தது."
என்கின்றது.

ஆதித்த கரிகாலன் போன்றதொரு வீரனை அது நாள் வரை கண்டிராத சோழ நாடு அவனது மறைவால் சோகத்தில் ஆழ்ந்தது.ஆதித்தனின் மறைவை தாங்க இயலாத சுந்தர சோழன் சில திங்களில் வானுலகம் எய்தினான்.சுந்தர சோழனின் மறைவுக்கு பின்னர் சோழ நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் நிகழ்ந்தது.சோழ நாட்டின் கீழ் இருந்த சிற்றரசர்களில் ஒரு சாரார் கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்றும் மற்றொரு சாரர் அருண்மொழி வர்மனே ஆட்சி பீடம் ஏறவேண்டும் என்றும் தங்களுக்குள் பிரிந்தனர்.

சங்கு சக்கர ரேகைகளை உடைய அருண்மொழிவர்மனுக்கு மக்களின் ஆதரவு பெரும் அளவில் இருந்தது.இந்த அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி எதிரிகள் மீண்டும் சோழ நாட்டின் மீது படைஎடுக்க கூடாது என்று நினைத்த அருண்மொழிவர்மன் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ஆட்சி பீடத்தின் மீதான தனது உரிமையை கண்டராதித்தரின் புதல்வனான உத்தம சோழனுக்கு விட்டுகொடுத்தார்.
மிக பெரும் தொன்மை வாய்ந்த சோழ நாட்டின் அரசுரிமையை தனது சிறியதந்தைகாக விட்டு கொடுத்தது அருன்மொழிவர்மனின் தயாள குணத்தை காட்டுகிறது.

உத்தம சோழனின் பதினைந்து ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் கி.பி-985இல் அரசு கட்டில் ஏறினான் ராசகேசரி அருண்மொழிவர்மன்.தனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில்(கி.பி-988) சேரனையும் பாண்டியனையும் கந்தாளூர் சாலை போரில் வென்றான்.இப்போருக்கு பிறகே அரசருக்கேலாம் அரசர் என்று பொருள் படும் "ராஜராஜன்" என்னும் அபிஷேக பெயரை சூடினான்.அதுவே அவனது பெயராக பின்னாளில் மாறி போனது.

விசயாலய சோழனால் அடிகோலப்பட்ட பிற்கால சோழ அரசு மகோன்னதம் அடைந்தது இவனது ஆட்சியிலே தான்.அது நாள் வரை தேங்கி இருந்த சோழரின் ஆற்றலை அனைத்து துறைகளிலும் வெளிக்கொண்டு வந்து சோழர் பரம்பரையை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் பேச செய்தவன் இவனே.இவன் இயற்கைலேயே நுண்ணறிவும்,பெரும் ஆற்றலும்,மக்களின் செல்வாக்கும்,இறைவனின் ஆசியும் உடையவனாய் இருந்து இருக்க வேண்டும்.இவனது முப்பது ஆண்டு கால நீண்ட ஆட்சியும் இவனது சாதனைகளுக்கு பெருந்துணை புரிந்துள்ளது.

அது நாள் வரை எந்த தமிழ் மன்னரும் செய்திராத ஒன்றை ராசராசன் செய்தார்.தனது ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அனைவரும் நன்குணரும் பொருட்டு அவற்றை விளக்கும் மெய்க்கீர்த்தியை இனிய தமிழில் அகவற்பாவில் அமைத்து தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை தொடங்கினான்.மன்னனது ஆட்சி வளர வளர மெய்க்கீர்த்தியும் வளர்ந்து கொண்டே போகும்.மெய்க்கீர்த்திகளில் இருப்பனவெல்லாம் கற்பனை அல்ல.அவை அனைத்தும் அந்த மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களே.

இறுதி காலங்களில் கிடைத்த ராசராசனின் மெய்க்கீர்த்தி,

"திருமகள் போல பெருநில செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனங்கொளக்கருதி
காந்தளூர் சாலை கலமறுத்தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழிற் சிங்களரீழமண்டலமும்
இரட்டை பாடி எழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரமும்
திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
எழில் வளர் ஊழியுளெல்லா யாண்டும்
தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்
தேசுகொள் கோ ராசா கேசரி வர்மரான
உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர்..."

இந்தமெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளை ராசராசன் கைப்பற்றி இருந்தான் என்பது இதன் மூலம் பெரபடுகிறது.பாண்டி மண்டலமும்,சேர மண்டலமும் அடங்கிய ராசராச தென்மண்டலமும், தொண்டை மண்டலமாகிய சயங்கொண்ட சோழ மண்டலமும்,கங்க மண்டலமும்,கொங்கு மண்டலமும்,நுளம்பாடி மண்டலமும்,கலிங்க மண்டலமும்,ஈழமாகிய மும்முடி சோழ மண்டலமும் இவனது ஆட்சியில் சோழ நாட்டிற்க்கு உட்பட்டு இருந்தது என்பது பெறப்படுகிறது.

வளர்ந்து கொண்டே வநத சோழ சாம்ராஜ்யத்தின் நிதிநிலையை சமாளிக்க அது வரையில் யாரும் யோசிக்காத வண்ணம் தனது சாம்ராஜ்யத்தை அளக்க உத்தரவிட்டான் ராஜராஜன்.இப்பெரும் பணியை மிககுறுகிய காலத்தில் செய்து முடித்தவன் சேனாதிபதி குரவன் உலகளந்தானான ராசராச மாராயன்.எவ்வளவு நன்செய் நிலங்கள்,புன்செய் நிலங்கள்,காடுகள்,விளைநிலங்கள் என்பதை புலப்படுத்தி அவற்றுள் விளைநிலங்களுக்கு மட்டும் வரி விதிக்குமாறு பரிந்துரைத்தான்.

இவ்வாறு பலத்துறைகளில் சிறப்புற்று விளங்கிய ராஜராஜனுக்கு பல்வேறு அபிஷேக பெயர்கள் இருந்தன.
ஷத்திரிய சிகாமணி,ராசேந்திர சிங்கன்,உய்யக்கொண்டான்,
பாண்டிய குலாசினி,கேரளாந்தகன்,நித்த வினோதன்,ராசாசிரையன்,
சிவபாதசேகரன்,சநநாதன்,சிங்களாந்தகன்,சயங்கோண்டசோழன்,
மும்முடி சோழன்,ரவிகுல மாணிக்கம்,நிகரிலி சோழன்,
சோழேந்திர சிங்கன்,சோழமார்த்தாண்டன்,ராசா மார்த்தாண்டன்,
தெலுங்குகுல காலன்,கீர்த்தி பராக்கிரமன் என்பன ஆகும்.

மன்னர்கள் கோயில் கட்டுவது என்பது புதிது அன்று.எதையும் புதிதாக முயற்சி செய்யும் ராஜராஜன் இதிலும் தனது புதுமையை கட்டினார்.அதாவது அதுவரை தென்னாட்டில் எங்குமே இல்லாத பரிமாணத்தில் 793 அடி நீளத்தில் 397 அடி அகலத்தில் 216 அடி உயரத்தில் ராஜராஜேச்வரம் என்னும் கோயிலை கட்டினான்,இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்து தமிழரின் கட்டிட கலையை உலகிற்கு உணர்த்துவது திண்ணம்.

இவ்வாறாக பலத்துறைகளில் சோழர்களின் முத்திரையை பதித்த ராசராசன் கி,பி-1012இல் தனது புதல்வனாகிய, பின்னாளில் ராசேந்திரசோழன் என்னும் அபிஷேக பெயரை அடைந்த இளங்கோ மதுராந்தகருக்கு இளவரசு பட்டம் சூட்டினான்.

வாழ்க ராஜராஜ சோழர்! வளர்க அவர் கீர்த்தி!

11/21/2018

உருத்திராட்சம் அணியும் போது பின்பற்ற வேண்டியவை

நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.
துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.
ருத்ராட்ச மாலையை அணியும் முறை
குடுமியில் அணிய வேண்டியது – 1
தலை உச்சியில் அணிய வேண்டியது – 13
தலையில் அணிய வேண்டியது – 36
காதில் அணிய வேண்டியது 1 அல்லது 6
கழுத்தில் அணிய வேண்டியது – 32
புஜத்தில் (கை 1க்கு) அணிய வேண்டியது – 16
ஒரு மணிக்கட்டில் அணிய வேண்டியது  – 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்க வேண்டியது – 25
இம்மை மறுமை பலன்களை அடைய உதவும் ஜெபமாலையில் (கையில் வைத்துக் கொள்ள) கட்ட வேண்டியது 27,53 அல்லது 108.
ருத்ராட்ச வடிவங்கள்
ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன் கொடுக்கிறது. சிவ புராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது
ஒரு முகம் – சிவ வடிவம்
இரு முகம் – தேவி வடிவம்
மூன்று முகம் – அக்னி சொரூபம்
நான்கு முகம் – பிரம்ம வடிவம்
ஐந்து முகம் – ருத்ர வடிவம்
ஆறு முகம் – சண்முக வடிவம்
ஏழு முகம் – அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் – கணபதி வடிவம்
ஒன்பது முகம் – பைரவர் வடிவம்
பத்து முகம் – திருமால் வடிவம்
11 முகம் – ஏகாதச ருத்திர வடிவம்
12 முகம் – துவாதச ஆதித்ய வடிவம்
13 முகம் – முருகன் வடிவம்
14 முகம் – சிவ வடிவம்
ருத்ராட்சையின் பிற பெயர்கள்
ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன
ருத்ராட்ச சிவலிங்கம்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச நாதர் கோயிலில் உள்ள மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலை அடிவாரத்திலுள்ள இந்தக் கோயிலின் மூலவரே, உலகின் முதல் சிவலிங்கம் என தல புராணம் கூறுகிறது. பங்குனி 22 முதல் சித்திரை முதல் தேதி வரை இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இமயத்தில் சிவபார்வதிக்கு நடந்த திருமணத்தை பொதிகையில் அகத்தியர் கண்டார். அந்த நிகழ்ச்சி சித்திரை முதல் நாளில் இங்கு நடத்தப்படும்.
ருத்ராட்சத்தால் ஆன அம்மன்
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இங்குள்ள கோயிலில் அருள்பாலிக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை சோட்டாணிக்கரை பகவதி என்று அழைக்கிறார்கள். இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனது என்பது தனி சிறப்பு. இவள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இங்கு வழிபாடு செய்து குணமடைகிறார்கள்.

11/20/2018

ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு

ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 19 நவம்பர் 1828
பிறந்த இடம்: வாரணாசி, இந்தியா 
இறப்பு: 18 ஜூன் 1858
தொழில்: ஜான்சியின் ராணி, விடுதலைப் போராட்ட வீரர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் (இப்போதைய வாரணாசி) ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது குழந்தை பருவத்தில், அவரை ‘மணிகர்ணிகா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை அன்போடு ‘மனு’ என்று அழைத்தனர்.
ஆரம்ப வாழ்க்கை
தனது நான்காவது வயதிலேயே அவரது தாயை இழந்ததால், குடும்பப் பொறுப்புகளனைத்தும் அவரின் தந்தை மீது விழுந்தது. பள்ளிப்பாடம் படித்து கொண்டிருந்த சமயத்தில், லக்ஷ்மிபை அவர்கள் அவர் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்தி சண்டை போன்ற தற்காப்புக்  கலைகளை முறையாக பயிற்சி மேற்கொண்டு கற்றார்.
இல்லற வாழ்க்கை
1842 ஆம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார். திருமணத்திற்கு பின், அவருக்கு ‘லட்சுமி பாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவரது திருமண விழா, பழைய ஜான்சி நகரில் அமைந்துள்ள, விநாயகர் கோவிலில் நடைபெற்றது. 1851ல்,  அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். துரதிருஷ்டவசமாக,  அந்த குழந்தையால் நான்கு மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியவில்லை.
1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில்,  பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.
படையெடுப்பு
ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி,  லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
போர்
ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.
1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து,  ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.
இறப்பு
ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு மாவீரரான ‘தந்தியா டோப்’ என்பவரை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். போர்க்களத்தில் அவர் மயக்கமாக இருந்த போது, ஒரு பிராமணர் அவரை அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கே அவர் மரணமடைந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர். அவரது மரணத்திற்குப் பின், மூன்று நாட்களில், குவாலியரை ஆங்கிலேய அரசு கைப்பற்றியது.
ராணி லட்சுமிபாய் அவர்களின் வீரமும், மகத்தான முயற்சியும், அவரை ‘இந்திய தேசிய இயக்கத்தின் உருவம்’ என்று குறிப்பிட வைத்தது. தனது வளர்ப்பு மகனான தாமோதரைப் பாதுகாப்பதே ராணி லட்சுமிபாய் அவர்களின் நோக்கமாக இருந்தது. அவரது கதை எதிர்வரும் சுதந்திர போராட்ட வீரத் தலைமுறைகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக ஆனது என்றால் அது மிகையாகாது.


ராணி வேலு நாச்சியார்

ராணி வேலு நாச்சியார்

வீரத்தின் அடையாளமாகவும் வெற்றித் திருவுருமாகவும் விளங்குகிறார் அவர். உலகில் மிகப்பழமையான பாதுகாப்பு இனமாகவும் சேதுபாலம் ராமலிங்கத்தின் பாதுகாவலர்களான சேதுபதி வம்சத்தில் 1730ஆம் ஆண்டு,உதித்தவர் தான் வேலு நாச்சியார்.தந்தை இராமநாதபுர மன்னர் முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி. தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். வேலுநாச்சியார் பிறந்தது ‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். ராமநாதபுரத்தின் இளவரசியான அவர் மகாபாரதம், ராமயணம், இலக்கியங்களை சிறு வயதிலேயே கற்றுத்தேர்ந்தார். மேலும் அவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர். சிறு வயதிலேயே போர்கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார். வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர். ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகில் மயிலாகவும் வீரத்தில் விட்டு கொடுக்காத புலியாக இருக்கும் அவரை வீரத்தையும் அழகையும் கண்டு காதல்வயப்பட்டு சிவகங்கை இளவரசர் கவுரிபவல்லப உடையன முத்துவடுகநாதத்தேவர் வேலுநாச்சியாரை மணந்து கொண்டார். 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார். சிவகங்கையை ஆக்ரமிக்க நினைத்து போர் தொடுத்த நவாப் கிழக்கிந்தியபடையை விரட்டியடித்தார். அதனால் நவாப் கிழக்கிந்தியபடையினர் வஞ்சத்தால் கொல்ல நினைத்தனர் கோவிலுக்கு ஆயுதமின்றி சென்ற இளவரசியையும் கொல்ல படையை அனுப்பினர் மன்னர் வளரிவீச்சீல் பல எதிகளை கொன்றார். நவாப் படையினர் மன்னரின் குதிரைக்கால்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும், கண்டந்துண்டமாக வெட்டி மன்னரையும் இளவரசியையும் படுகொலை செய்தனர் இதற்கு தலைமை தாங்கியவன் தளபதி பான்ஜோர்,ஜோசப ஸ்மித். சிவகங்கையை கைப்பற்றி உசேன்பூர் என்று பெயர் மாற்றம் செய்தனர்.மன்னர் இறந்த செய்தி எட்டி வேலு நாச்சியார் கதறினார். கணவரின் உடலைப் பார்க்க துடித்தார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய நவாப் படை ஒன்றை அனுப்பினான் வேலு நாச்சியார் எதிரிப்படைகளை துவம்சம் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென துடித்தார்.கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். வேலு நாச்சியார். காளையர் கோயிலில் எங்கெங்கும் பிணக் குவியல். இறந்த அரசரும் இளையராணியும் காண, தானும் உடன்கட்டை ஏறி உயிர் விட முடிவு செய்தார். அமைச்சர் தாண்டவராய பிள்ளை, தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் மனதை மாற்றி நாட்டை எதிரியிடமிருந்து மீட்டு உங்கள் கைகளால் பழி வாங்கவேண்டும் என உரைத்தனர். அரசியையும் வெள்ளச்சி நாச்சியார்யையும் திண்டுக்கல் கோபால நாயக்கர் கோட்டைக்கு மருது சகோதரர்களின் பாதுகாப்போடு கொண்டு சென்றனர் . விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர்,விருப்பாட்சியில் பாதுகாப்பாக தங்க வைத்தார்.ஆண் வேடத்தில் ஐதர் அலியை சந்தித்து படையுதவி கேட்டார் அவரும் 5000 குதிரைவீரர்களையும் 5000 காலாட் வீரர்களையும், பீரங்கிப்படைஒன்றையும் உடன் அனுப்பி வைத்தார்.1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது.,விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வேலு நாச்சியாரை காட்டி கொடுக்காததால் கொல்லப்பட்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு,தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தினார். இன்று தெய்வமாக அவர் வெட்டுண்ட காளியம்மனாக வணங்கப்படுகிறார். மறவர் சீமையின் படைகளோடு மருதுபாண்டியரின் மக்கள் படையும் சேர்ந்து கம்பனிபடையை நாசம் செய்தது. மருதுபாண்டியரின் கொரில்லா போர் முறை உக்கிரம் தாளது அந்திய படை தோற்று ஓடியது. ராணியார் பெண் படையுடன் மகாஉக்கிரம் காட்டினார். தேசப்பற்று மிக்க குயிலி என்ற பெண் உடலில் தீ மூட்டி கம்பனியின் ஆயுதக்கிடங்கில் புகுந்து சர்வநாசம் செய்து இறந்தார். தனது ஐம்பதாவது வயதில், தனதுகணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். கடைசியில் எதிரிப்படை வீழ்ந்தது ராணி பான்ஜோர் கழத்தில் கத்தி வைக்க பான்ஜோரும் ஸ்மித்தும் மண்டியிட்டு ராணியிடம் உயிர்பிச்சை அளிக்குமாறு வேண்டினர் ராணிக்கு மன்னிப்பு பட்டயம் எழுதி கொடுத்தனர் மண்டியிட்டவருக்கு மரணம் விளைவிப்பது அதர்மம் ஆதலால் மன்னிப்பு அளித்தார். சிவகங்கையின் ராணியாய் மீண்டும் பதவி ஏற்றார்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. 1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ்நாட்டுக்குச் சென்றார். மருது சகோதரர்களை மகன்களாக எண்ணி நாட்டின் ஆளுநர்களாக நியமித்தார் 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால்,விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். வேலுநாச்சியார் 25டிசம்பர் 1796 இறந்தார்.உலகில் எந்த ராணியும் ராணி வேலு நாச்சியாருக்கு இணையாக முடியாது.

11/19/2018

மனுநீதிச் சோழன் நீதியின் அடையாளமா?

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனுநீதிச் சோழனின் சிலையை அகற்ற வேண்டும் என்று கோரி சேலம் இந்திரா நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.பிரவீணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,
மனுநீதிச் சோழனின் மகன் சாலையில் தேரோட்டிச் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்த ஒரு பசுவின் கன்று தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது. இந்நிலையில் பசுவின் துயரத்தை அறிந்த மனுநீதிச் சோழன் தன் சொந்த மகனையே தேரை ஏற்றிக் கொன்றான். இதனால் நீதியின் அடையாளமாகப் போற்றப்படும் மனு நீதிச் சோழனின் சிலை உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
பசுவின் கன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்து தேர் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில் மனுநீதிச் சோழன் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. பசுவின் கன்றைக் கொல்ல வேண்டும் என்ற எவ்வித நோக்கமும் அவனுக்கு இல்லை.
இந்நிலையில் ஒரு சிறுவனை கொடூரமாகக் கொன்ற மனுநீதிச் சோழனை நீதியின் அடையாளமாகக் கூற முடியாது. ஆகவே, உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மனுநீதிச் சோழன் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவினை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து மார்ச் 27 அன்று ஆணையிட்டனர். ஆனால்,கோரிக்கை என்னவோ மிகச்சரியானதுதானே. மனுநீதி என்பதே ஒரு குலத்துக்கு ஒரு நீதி உரைப்பதுதான். மனுநீதியை நம்பிய அந்த மதி கெட்ட மன்னன் ஓர் மனித உயிரை அல்லவா கொன்றிருக்கிறான். இன்றைய காலத்தில் சாலை விதிகளை மீறி குறுக்கே வந்து உயிரிழப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அன்றாடம் செய்தி ஏடுகளில் பல்வேறு விபத்துகளை படிக்க நேர்கிறது. இன்று சாலை விதிகளை மதிக்கவில்லையென்றால்தான் தண்டனை.ஏனென்றால் இது மனித நீதிக் காலம். இப்படி ஓர் வழக்கு, இந்தக் காலத்தில் வந்தால் நீதிபதிகள் எந்த அடிப்படையில் தீர்ப்பளிப்பார்கள்? மனு நீதிச்சோழன் காட்டிய வழியிலா? அல்லது மனிதநீதி வகுத்த சாலைப் போக்குவரத்து சட்டங்களின் படியா?
இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் காட்டப்படும் விலங்குபசுவின் கன்று என்பதால் தான் மனுநீதி வேலை பார்த்திருக்கிறது. அது எருமையாகவோ, நாயாகவோ, கழுதையாகவோ ஏன் காட்டப்படவில்லை என்று கேள்வி எழுப்பிப் பார்த்தால் தெரியும் பார்ப்பன மனுநீதியின் லட்சணம். பசு புனிதமானது என்ற சிந்தனையைத் தவிர மனுநீதிச் சோழன் கதையைப் பார்ப்பனர்கள் முன்னிறுத்த வேறென்ன காரணம் இருக்க முடியும்?

11/18/2018

திருவள்ளுவர்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
வாழ்ந்த காலம்: 2 ஆம் நூறாண்டு முதல் 8 நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம்
பிறப்பிடம்: மயிலாப்பூர், தமிழ் நாடு மாநிலம், இந்திய
பணி: புலவர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படவில்லை.
மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.
வள்ளுவரின் திருக்குறள்
திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.
ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
  • அறத்துப்பால் – முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
  • பொருட்பால் – இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.
  • இன்பத்துப்பால் – மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.
முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.
திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும், இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.
அவர் இயற்றிய வேறு நூல்கள்
திருக்குறளைத் தவிர, திருவள்ளுவர் மருத்துவம் பற்றிய இரு நூல்களான ‘ஞான வெட்டியான்’ மற்றும் ‘பஞ்ச ரத்னம்’ ஆகிய நூல்களை இயற்றியுள்ளதாகப் பலரும் தெரிவிக்கின்றனர்.
நினைவுச் சின்னங்கள்
இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.

11/17/2018

சுப்ரமணிய பாரதியார்

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.    .
பாரதியாரின் திருமண வாழ்க்கை
பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு
 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது

குமரி கண்டம்

 சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப...