இராவணன் வெட்டு
கோணமாமலை அமர்ந்தாரே என ஞான சம்பந்தராலும், மன்னும் திருக்கோணமலை என சேக்கிழராலும் மற்றும் அருணகிரிநாதர் உமாபதி சிவாச்சாரியார் ஆகியோரால் புகழ்ந்து பாடப்பட்டு அகத்திய முனிவரால் வணங்கப் பெற்றதும் குளக்கோட்ட மன்னனால் திருப்பணி செய்யப்பட்டதும் இராவணேஷசனால் வழிபட்ட பெருமைக்குரிய சிவதலமாம் திருக்கோணேஸ்வரத்தின் உற்சவ காலம் உலகத்தவரின் உற்சவ காலமாகப் போற்றப்படுகிறது.
கைலாசபுராணம், தட்ஷணகைலாசம், திருக்கோணாசல புராணம், கோணேஷர் கல்வெட்டு, திருகோணாசல வைபவம், திருப்புகழ், திருகோணமலை அந்தாதி யாழ்ப்பாண சரித்திரம், சீர்பாதகுல வரலாறு மட்டக்களப்பு மான்மியம் ராஜாவலிய, மச்ச புராணம் குடுமிபாமலைச் சாசனம் முதலிய எண்ணற்ற நூல்களால் இவ்வாலயத்தின் பெருமை புகழ்ந்துரைக்கப்படுகின்றது.
கோணேஸ்வரம் உன்னத நிலையில் இருந்த காலத்தில் இக் கோவிலின் அர்ச்சகராக இருந்த பண்டிதராஜர் என்னும் புலவரால் பாடப்பட்ட தட்ஷணகைலாச புராணம் என்னும் நூலில் ஆலயத்தின் தோற்றம், ஆதி வரலாறு பின்வருமாறு கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் உண்டான வாக்குவாதத்தில் ஆதிசேஷன் தனது பலத்தைக் காட்டுவதற்காக தனது ஆயிரம் படத்தினாலும் கைலங்கிரியை மறைத்து வாலினால் கைலங்கிரியின் அடிப்பாகத்தை சுற்றினான். இது கண்டு கோபங் கொண்ட வாயு பகவான் தனது பலத்தினால் கைலாசத்தின் தென் பகுதியிலுள்ள மூன்று சிகரங்களைப் பிடுங்கிக் கொண்டு விரைந்து சென்றான். சிவன் வாயு பகவானை அழைத்து அவனது வீரத்தைப் புகழ்ந்து வாழ்த்தி பிடுங்கிய சிகரங்களில் ஒன்றை ஈழத்தின் கீழ் கரையில் வைக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு அமைய மூன்று சிகரங்களில் நடுச்சிகரமான திருக்கோணேஸ்வரத்தை வைத்தான் என்று தட்ஷண கைலாசம் கூறுகிறது.
திருக்கோணேஸ்வரத்தின் வரலாற்றை இலங்காநேசன் இராவணேஷ்வரனுடன் தொடர்புபடுத்திக் கூறும் ஒரு புராண வரலாறும் உண்டு. தசக்கிரீவன் தாயாரின் வேண்டுகோளுக்கு அமைய சிவலிங்கம் ஒன்றைப் பெற கைலயங்கிரி சென்றான் என்றும் சிவலிங்கத்தை கொடுத்தருளிய சிவன் இந்த சிவலிங்கத்தை பூமியில் வைத்தால் அதனை மீண்டும் எடுக்க முடியாது. பூமியில் அதனை பிரதிட்டை செய்து வைத்தால் பூமியில் அவனை வெல்லக்கூடியவர் எவருமிலர் என்று கூறியது அறிந்த தேவர்கள் தந்திரம் செய்து லிங்கத்தை பிரதிட்டை செய்யாமல் தடுத்தனர். தனது முயற்சியை கைவிடாத இராவணன் தாயின் ஆசையை நிறைவேற்ற கோணேஸ்வரம் வந்து இறைவனை வேண்டினான் என்றும் சிவலிங்கம் கிடைக்காத கோபத்தால் இராவணன் தனது வாள் கொண்டு கோணமலையை வெட்டினான் என்றும் அதுவே இராவணன் வெட்டு என்று புராண, இதிகாசங்கள் பகருகின்றன.
தட்ஷண கைலாசத்தில் கூறப்பட்டது போல் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை புண்ணிய சிறப்புக்களைக் கொண்ட கோணேஸ்வர ஆலயத்தில் நவரத்தின வீதி, மரகத வீதி, மாணிக்க வீதி, நீல ரத்தின வீதி என ஒன்பது வீதிகளையும் மாட மாளிகைகள் நவரத்தின கோபுரங்கள் மாண்புறு தீர்த்தங்களையும் கொண்ட தேவேந்திர புரமாக விளங்கியதாக அப் புராணம் கூறுகிறது. இதனை இப் புராணத்தில் வரும் பாடலால் அறிந்து கொள்ளலாம்.
வரையெல்லாம் ஆரம் ஆரம் வனமெலாம் நன்கார் நன்கார் நிறைவெல்லாம் சாலி சாலி, நிலையெலாம் கன்னல் கன்னல் தரையெலாம் நீலம் நீலம், தடமெலாம் நாறும் நாறும் கரையெலாம் அன்னம் அன்னம் கடலெலாம் ஈழம் ஈழம் இத்தகைய பெருமை கொள் கோணேஸ்வரத்தின் புகழ் கூறும் இன்னொரு நூல் கவி ராஜவரோதயன் என்பவரால் பாடப் பெற்ற கோணேஸர் சாசனம் என அழைக்கப்படும் கோணேஸர் கல்வெட்டாகும். இந் நூலில் ஆலயத்தின் கோட்டம் கோபுரம் மதில் தீர்த்தம், நிலம் என்பவற்றை அமைத்த குளக்கோட்டன் மன்னனுடைய ஆற்றலையும் அரும் பணியையும் கீர்த்தியையும் இந் நூல் கூறுகிறது. செய்யுள் நடையில் அமைந்த இந்த நூலின் முதலாவது பகுதியில் குளக்கோட்ட மன்னன் செய்த திருப்பணிகள் கூறப்பட இரண்டாவது பகுதியில் கயவாகு மன்னன் செய்த திருப்பணி எடுத்துக் கூறப்படுகிறது. இந் நூலின் காப்பு செய்யுள்களுக்கு அடுத்து வரும் செய்யுள்களில் கோணேஷர் கோட்டம், கோபுரம், மதில் மண்டபம், பாபநாசத் தீர்த்தம் என்பவற்றின் புகழும் சிறப்பும் பேசப்படுகிறது. கோயிலை புனரமைத்த குளக்கோட்டன் பாபநாசம் என்னும் மன்னுபவம் அறுக்கும் தீர்த்தத்தையும் கட்டுவித்தான் என கோணேஸ்வர் வாயில் கற்சாசனம் உறுதிப்படுத்துகிறது.
1624ஆம் ஆண்டு போர்த்துக்கீச தளபதி பெரும் புகழும் செல்வங்களும் கொண்ட கோணேஸர் ஆலயத்தை இடித்து தரை மட்டமாக்கினான். கோவில் செல்வமெல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டது. கோவிற் கற்கள் கோட்டை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆலயம் அழிக்கப்பட்டபோது சில தெய்வ விக்கிரகங்கங்களைக் காப்பாற்றி தம்பலகாமத்துக்கு எடுத்துச் சென்று அங்கே ஆதி கோணேஸ்வரர் என்ற ஆலயத்தை அமைத்தான் இரண்டாம் இராஜசிங்கன். 1950ஆம் ஆண்டு கிணறு ஒன்று ஆலய வளவினுள் தோண்டும்போது ஐந்து உருவங்களை கண்டெடுத்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஆலயத்தில் வைத்து வழிபட்டு வந்தார்கள். இதனை இன்றும் மலை உச்சியில் மரத்தின் கீழ் இருக்கும் இலிங்கத்துக்கு பூஜைகள் நடைபெறுவதை பக்தர்கள் காணலாம்.
1963ஆம் ஆண்டு திருப்பணி வேலைகள் நிறைவேற்றப்பட்டு முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1981ஆம் ஆண்டு இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த குரைகடல் ஓத நித்திலம் கொழிக்கும் என்றெல்லாம் 7ஆம் நூற்றாண்டில் ஞானசம்பந்தரால் பாடப்பட்ட கோணேஷப் பெருமான் சிவராத்திரிக்கு மறுநாள் மாதுமையம்பாள் உடனுறைய ஊர்வலம் புறப்படுவார். இரவு தோறும் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் முதல் நாள் இரவு விஸ்வநாத சிவன் கோவிலிலும் இரண்டாம் நாள் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோயிலிலும் தங்கி தரிசனம் தந்து மூன்றாவது நாள் ஆலயத்துக்கு எழுந்தருளுவது வழமையாகும். ஆடி அமாவாசை தினத்தன்று சுவாமி மலையிலிருந்து எழுந்தருளி கடல் தீர்த்தம் ஆடச் செல்வார். மஹா மகத்திற்கு திருமலையில் உள்ள எல்லா ஆலயங்களிலுமிருந்து எழுந்தருளி வந்து மஹா மகத் தீர்த்தோற்சவம் நடைபெறுவது பக்தர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாகும்.
கோணேஷப் பெருமானின் வருடாந்த பிரம்மோற்சவம் பங்குனித் திங்கள் தோறும் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தியிரண்டு நாட்கள் நடைபெறும். இதில் இரதோற்சவ (தேர்த்திருவிழா) 17ஆம் நாளும் (14.04.2010) அன்றைய தினம் விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகன் உடனுறை மாதுமையம்பாள் சகிதம் சோமாஸ்கந்த மூர்த்தியாக இரதத்தில் ஆரோகணித்து வரும் காட்சி காண கண்கோடி வேண்டும். 18ஆம் திருவிழா (15.04.2010) பாபநாச தீர்த்தக் கிணற்றில் தீர்த்தோற்சவம் நடைபெறும். அடியவர்களின் பாவம் போக்கி அருள்பாலிக்கும் தீர்த்தமாகையால் பாபநாசத் தீர்த்தம் எனப்படுகிறது.
கொடி இறக்கம், பூங்காவன உற்சவம் முடிவுற்ற மறுநாள் (17.04.2010 சனிக்கிழமை) புகழ் பெற்ற தெப்ப திருவிழா நடைபெறும் இன்றைய தினம் கோவில் வாசலில் குரைகடலாய் ஒலித்துக் கொண்டிருக்கின்ற ஆழியிலே விசேடமாக அமைக்கப்பட்ட பீடத்திலே கோணேஷர் மாதுமை அம்பாள் உடனுறைய வீற்றிருந்து அடியவர்களுக்கு தரிசனம் கொடுத்து அருள்பாலித்து அழகுமிகு கலைகளை அடியவர்கள் புனைய நயக்கும் நாள் தெப்பத் திருவிழா எனப்படுகிறது.
நன்றி: கலைகேசரி
அருமை அற்புதம்,தேடற்கரிய செய்திக் களஞ்சியத் தொகுப்பு,!!! ராமனை விட ராவணன் உத்தமன் தான்